CricketArchive

வெகுண்டது ராஜஸ்தான் சுருண்டது பெங்களூர்
by CricketArchive


Scorecard:Rajasthan Royals v Royal Challengers Bangalore
Player:DPMD Jayawardene

DateLine: 17th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 40-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்.
தேதி: 17.05.2008. சனிக் கிழமை.
மோதிய அணிகள்: ராஜஸ்தான் - பெங்களூர்
முடிவு: 65 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
ஆட்ட நாயகன்: கிரேம் ஸ்மித்

 

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டியின் 40-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் அணியும் பெங்களூர் அணியும் மோதின. இதில் 65 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

பூவா தலையா வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ராகுல் திராவிட், முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 197 ரன்களைக் குவித்தது.

இன்னிங்ஸைத் தொடங்கிய கிரேம் ஸ்மித்- ஸ்வப்னில் அஸ்நோத்கர் ஜோடி, சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 109 ரன்களைக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரேம் ஸ்மித் 49 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 75 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அஸ்நோத்கர் 44 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் சரியாக அரை சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார். அனில் கும்ப்ளே அவரை ஆட்டமிழக்கச் செய்தார்.

ஷேன் வாட்சன் 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட 46 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 20 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பெங்களூர் அணி, தொடக்கம் முதலே சரிவைச் சந்தித்தது. 5 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களைச் சேர்த்து தோல்வியுற்றது.

அந்த அணியின் கேப்டன் ராகுல் திராவிட்டின் ஆட்டம், அணியின் இந்த அளவிலான கௌரவத்துக்கு காரணமாக அமைந்தது. அவர் 36 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 75 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

யூசுப் பதானின் ஓர் ஓவரில் 3 சிக்ஸர்களை அவர் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஆட்டம் மட்டுமே அணிக்கு பாலைவனச் சோலையாகக் காட்சியளித்தது.

இவருக்கடுத்து அணியில் அதிகபட்சமாக ஜாக் காலிஸ் 20 ரன்களும், கேமரான் வொயிட் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே ஆட்டமிழந்தனர். இதில் மூன்று வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஷேன் வார்னே 23 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சோஹைல் தன்வீர் 10 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக கிரேம் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் அணிக்கு இது 8-வது வெற்றி என்பதால் அந்த அணி மொத்தம் 16 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து கொண்டுள்ளது.

பெங்களூர் அணி, 10 ஆட்டங்களில் விளையாடி வெறும் 4 புள்ளிகளைச் சேர்த்துள்ளது. இது, அந்த அணிக்கு 8-வது தோல்வியாக அமைந்ததால் இனி அரை இறுதிக்குள் நுழைவது கடினமே.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive