|
| Event: | Tri-Nation ODI Series 2008 |
மும்பை, மே 30: வங்கதேசத்தில் நடைபெற உள்ள முத்தரப்பு ஒருநாள் போட்டி மற்றும் ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட்டது. 5 பேர் கொண்ட தேர்வுக் குழு மும்பையிலுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை கூடியது.
இக்கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனியும், பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனும் பங்கேற்றனர்.
காயம் காரணமாக சச்சின் தெண்டுல்கர் இத் தொடர்களில் பங்கேற்க மாட்டார் என நேற்றே அறிவிக்கப்பட்டு விட்டதால் அவர் பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ராகுல் திராவிட், சௌரவ் கங்குலி ஆகியோருக்கு இத்தொடர்களில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்தியாவில் நடைபெற்றுவரும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் யூசுப் பதானும் (இர்பான் பதானின் சகோதரர் - ராஜஸ்தான் அணி வீரர்), இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவும் (டெக்கான் அணி வீரர்) அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி வீரர்கள் விவரம்:
மஹேந்திரசிங் தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), யுவராஜ்சிங், ராபின் உத்தப்பா, கௌதம் காம்பீர், வீரேந்திர ஷேவாக், ரோஹித் சர்மா, சுரேஷ் ராய்னா, யூசுப் பதான், இர்பான் பதான், ஸ்ரீசாந்த், இஷாந்த் சர்மா, பிரவீண் குமார், ஆர்.பி.சிங், பியூஷ் சாவ்லா, பிரக்யான் ஓஜா.
கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் இந்தியா விளையாடியது. இத் தொடரின் இறுதி ஆட்டங்களில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கணக்கில் வென்று முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. அந்த அணியில் திராவிட், கங்குலி ஆகியோர் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Copyright © 2003-2008 CricketArchive