CricketArchive

2வது டெஸ்ட்: முதல் நாள் இந்தியா 214/4
by CricketArchive


Scorecard:Sri Lanka v India
Event:India in Sri Lanka 2008

DateLine: 31st July 2008

 

வணக்கம்.

 

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது

 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

 

இந்த அரு அணிகளுக்கும் இடையே, கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலேவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்றுகாலை 10.15 மணிக்கு துவங்கியது.

 

இரு அணிகள் சார்பிலும் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களே, இப்போட்டியிலும் களமிறங்கினர்.

 

பூவா... தலையா... வென்ற இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

 

அதன்படி, இந்திய அணியின் துவக்க வீரர்களாக வீரேந்திர ஷேவாக்கும், கௌதம் காம்பீரும் களமிறங்கினர். ஷேவாக் வழக்கம் போல் அதிரடியாக ஆடினார். கௌதம் காம்பீர் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

 

ஒருதினப்போட்டிபோல் ஆடிய ஷேவாக் அஜந்தா மெண்டிஸ் பந்து வீச்சை விரட்டியடித்தார். உணவு இடைவேளையின்போது, இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 151 ரன்கள் எடுத்திருந்தது. ஷேவாக் 91 ரன்களுடனும், காம்பீர் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

 

சிறப்பாக ஆடிய காம்பீர் 94 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட தனது 4வது அரைசதத்தைக் கடந்தார்.

 

உணவு இடைவேளைக்குப் பிறகு அங்கு மழை பெய்ததால் ஆட்டம் 3 மணி நேரத்திற்குப் பிறகு தாமதமாகத் துவங்கியது. 91 ரன்களுடன் இருந்த ஷேவாக் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி தனது 15 வது (இலங்கைக்கு எதிராக முதல்) டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 87 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் இச்சதத்தை அவர் எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிறப்பாக ஆடிவந்த காம்பீர் 56 ரன்கள் எடுத்திருந்தபோது அஜந்தா மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தார். இவரையடுத்து வந்த ராகுல் திராவிட்டும் 2 ரன்கள் எடுத்த திருப்தியில் அஜந்தா மெண்டிஸ் சுழலில் மீண்டும் ஆட்டமிழந்தார். (முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் அஜந்தா மெண்டிஸ் சுழலில்தான் திராவிட் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

 

இப்போட்டியிலாவது டெஸ்ட் அரங்கில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்களை, சச்சின் தெண்டுல்கர் 5 ரன்களில் ஆட்டமிழந்து இம்முறையும் ஏமாற்றமளித்தார். இவரை வாஸ் வெளியேற்றினார். இதே ஓவரின் கடைசி பந்தில் சவுரவ் கங்குலியும் ஆட்டமிழந்தார். இவர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

 

இப்படி மீண்டும் ஒருமுறை மூத்த வீரர்கள், சொற்பரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, எரிச்சலை ஏற்படுத்தினர்.

 

இவர்களையடுத்து வீரேந்திர ஷேவாக்குடன், வி.வி.எஸ்.லட்சுமண் ஜோடி சேர்ந்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது.

 

வீரேந்திர ஷேவாக் 128 ரன்களுடனும், இவருக்கு ஒத்துழைப்பு தந்த வி.வி.எஸ்.லட்சுமண் 13 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்துள்ளது.

 

அஜந்தா மெண்டிஸ், சமிந்தா வாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இன்னும் நான்கு நாள் ஆட்டம் மீதம் உள்ளது.

 

நன்றி, வணக்கம்


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive