CricketArchive

மஹேல ஜெயவர்தனே
by CricketArchive


Player:DPMD Jayawardene

DateLine: 19th August 2008

 

முழுப்பெயர்: தெனகமகே பிரபாத் மஹேல டி சில்வா ஜெயவர்தனே

 

பிறப்பு: 27 மே 1977. கொழும்பு, இலங்கை.

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

அணியில் வீரரின் நிலை: மட்டை வீச்சாளர்.

 

பந்து வீச்சு முறை: வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இலங்கை, ஆசிய லெவன், வயம்பா அணி, பஞ்சாப் கிங்ஸ் லெவன். சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப்.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: ஆகஸ்டு 2-6, 1997 அன்று இலங்கை- இந்தியா இடையே கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி
ஒருதினப் போட்டி: ஜனவரி 24, 1998 அன்று ஜிம்பாப்வே - இலங்கை இடையே கொழும்புவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஆகஸ்டு 17, 2004 அன்று பர்கெர் ரெக்ரியேஷன் கிளப் - சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவர். தற்போதைய இலங்கை அணியின் எழுச்சிமிகு கேப்டன். இவரது ஆட்டமுறை பார்க்க மிக நேர்த்தியாக இருக்கும். ஒவ்வொரு அடியும் அதிரடியாக இருக்கும். இலங்கை அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர்.

 

ஆகஸ்டு 2-6, 1997 அன்று இலங்கை- இந்தியா இடையே கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், சர்வதேச அளவில் முதன்முதலாக அறிமுகமானார். அதுமுதல் இலங்கை அணியின் நடுவரிசை ஆட்டக்காரர்களில் மிக முக்கியமானவராகத் திகழ்ந்து வருகிறார்.

 

ஏப்ரல் 2006-ல் இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தது. அப்போது இவர் இலங்கை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார். இங்கிலாந்துக்கெதிரான ஐந்து ஒருதினப் போட்டிகளிலும் இலங்கை அணியை திறம்பட வழிநடத்தி 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினார். மேலும் இத்தொடரின் இரடண்டாவது போட்டியில் 66 ரன்களும், மூன்றாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 126 ரன்களும், நான்காவது போட்டியில் 100 ரன்களும் குவித்து அசத்தினார். இத்தொடரின் 5 வது போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 321 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய இலங்கை அணி 37.3 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது இவரது தலைமைக்கு கிடைத்த சிறப்பான வெற்றியாகும்.

 

டெஸ்ட் போட்டிகளிலும் இவரது சாதனைக்கு அளவில்லை எனலாம். இவர் முதன்முதலாக இந்தியாவிற்கு எதிராக அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதமடித்து அசத்தினார். இதற்கடுத்து நியுசிலாந்திற்கெதிரான தொடரின் முதல் டெஸ்டில் இரண்டு அரை சதங்களும், இரண்டாவது டெஸ்டில் 167 ரன்களும் குவித்தார். இது இவர் ஆடிய 5 வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதையடுத்து இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இதே அணிக்கெதிராக 242 ரன்கள் குவித்து தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இது அவர் ஆடிய ஏழாவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.

 

இதன்பிறகு இவர் இரண்டு முறை இரட்டை சதம் கடந்துள்ளார். 2006-ல் தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்தது. அப்போது இரு அணிகளுக்கும் இடையே கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சங்ககாராவுடன் இணைந்து புதிய சாதனையைப் படைத்தார். சங்ககாரா 287 ரன்கள் அடிக்க, இவர் 374 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டிற்கு 624 ரன்கள் குவித்தது.

 

ஒருதின போட்டியிலும் சரி, டெஸ்ட் போட்டிகளிலும் சரி இவர் ஒரு திறமையான பேட்ஸ்மேன் என்பது மட்டுமின்றி, சிறப்பான கேப்டன் என்ற திறமையையும் தன்வசம் வைத்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்காக விளையாடினார்.

 

அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, கோப்பையை கைப்பற்றியது இவரது தலைமையிலான இலங்கை அணி.

 

இந்திய அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அப்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை இவரது சீரிய தலைமையில் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இத்தொடரின் முதல் டெஸ்டில் 136 ரன்களும், இரண்டாவது டெஸ்டில் 86 ரன்களும், மூன்றாவது டெஸ்டில் 50 ரன்களும் குவித்து அசத்தினார்.

 

இதையடுத்து இந்திய அணியுடன் மோத உள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடருக்கும், செப்டம்பரில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கும் , இலங்கை அணியின் கேப்டனாக இவரே நீடிக்கிறார்.

 

வெளியான தேதி: 14. ஆகஸ்டு 2008.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive