CricketArchive

வாசிம் ஜாபர்
by CricketArchive


Player:W Jaffer

DateLine: 8th September 2008

 

முழுப்பெயர்: வாசிம் ஜாபர்
பிறப்பு: பிப்ரவரி 16, 1978. பம்பாய் (தற்போது மும்பை), மஹாராஷ்டிரா, இந்தியா.
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்
பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்பந்து வீச்சாளர்
அணியில் வீரரின் நிலை: மட்டை வீச்சாளர்
விளையாடிய அணிகள்: இந்தியா, இந்தியா ஏ, இந்தியா பிரெசிடென்ட் லெவன், மும்பை, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.

 

அறிமுகம்: டெஸ்ட் போட்டி: பிப்ரவரி 24-26, 2000, இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: நவம்பர் 22, 2006 அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே டர்பனில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஏப்ரல் 16, 2007 அன்று தமிழ்நாடு - மும்பை இடையே அஹமதாபாத்தில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளுக்கென்றே விளையாடும் வீரர். இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் வாசிம் ஜாபர். இளம் வயதில் விளையாடிய அசாருதீனைப் போல் விளையாடக் கூடியவர்.

 

சச்சின் தெண்டுல்கர் பிறந்த அதே மும்பையில்தான் வாசிம் ஜாபரும் பிறந்து வளர்ந்தார். 1995-ல் தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கினார். 1996-லிருந்து முதல் தரப்போட்டிகளில் அறிமுகமானார். இவர் ஆடிய இரண்டாவது முதல்தரப் போட்டியிலேயே, முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

 

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் பிப்ரவரி 24-26, 2000, இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக அறிமுகமானார். ஆனால் ஒருதினப்போட்டியில் இவர் அறிமுகமாவதற்கு 6 ஆண்டுகள் பிடித்தது.

 

இவர் அறிமுகமான முதல் டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 46 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதன்பிறகு 2001-02 காலகட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்தார். இத்தொடரில் 3 போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்கள் உள்பட 156 ரன்கள் குவித்தார். 2002-ல் இங்கிலாந்திற்கெதிரான தொடரில் 2 டெஸ்டில் விளையாடி மொத்தம் 56 ரன்கள் மட்டுமே குவித்ததால் அதற்கடுத்த தொடர்களில் சேர்க்கப்படவில்லை.

 

இதன் பிறகு இவர் அணியில் இடம்பெறுவதற்கு 3 ஆண்டுகள் ஆனது. இந்த இடைப்பட்ட காலத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். 2005-06 ல் இங்கிலாந்திற்கெதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இடம் பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் 81 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்களும் குவித்தார். டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை இப்போட்டியில் நிறைவு செய்தார்.

 

2006-ல் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளிலில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையே ஜூன் 2-ல், ஆண்டிகுவாவில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 1 ரன்களில் ஆட்டமிழந்தார், இரண்டாவது இன்னிங்ஸில் 212 ரன்கள் குவித்து அசத்தினர். டெஸ்ட் அரங்கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தது மட்டுமின்றி, அதிகபட்ச ரன்னையும் பதிவு செய்தார்.

 

இதே வருடத்தில் தென்னாப்பிரிக்கா சென்ற அணியில் இடம்பிடித்தார். இரு அணிகளுக்கும் இடையே டர்பனில் நடைபெற்ற இரண்டாவது ஒருதினப் போட்டியில் தனது சர்வதேச ஒருதின அறிமுகத்தை ஆரம்பித்தார். முதல் போட்டியில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இவர் ஆடிய இரண்டாவது ஒருதினப் போட்டியில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு ஒரு தின அணியில் இவர் சேர்க்கப்படவே இல்லை.

 

2007-ல் பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தது. இரு அணிகளுக்கும் இடையே கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். முதல் இன்னிங்ஸில் 202 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 56 ரன்களும் குவித்தார். இரட்டை சதம் அடித்த இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது இவருக்கே கிடைத்தது.

 

2008-ல் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான தொடரில் 3 டெஸ்டில் விளையாடி 126 ரன்கள் மட்டுமே குவித்தார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார்.

 

இவர் திறமை வாய்ந்த டெஸ்ட் வீரர் என்பது மட்டுமல்ல, களத்தில் அதிக நேரம் நின்று அற்புதமாக விளையாடக் கூடியவர்.

 

கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive