CricketArchive

சமிந்தா வாஸ்
by CricketArchive


Player:WPUJC Vaas

DateLine: 19th August 2008

 

முழுப்பெயர்: வர்ணகுல சூரிய பதபென்டிகே உசாந்த ஜோசப் சமிந்தா வாஸ்

 

பிறப்பு: 27 ஜனவரி 1974. மட்டுமாகலா, இலங்கை.

 

மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர்

 

அணியில் வீரரின் நிலை: வேகப்பந்து வீச்சாளர்.

 

பந்து வீச்சு முறை: இடதுகை வேகப்பந்து வீச்சாளர்

 

விளையாடிய அணிகள்: இலங்கை, ஆசிய லெவன், பஸ்னகிரா வடக்கு, கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப், ஹாம்ப்ஷையர், மிடில்செக்ஸ், வொர்செஸ்ஷையர், டெக்கான் சார்ஜர்ஸ்.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: ஆகஸ்ட் 26- 28, 1994 அன்று இலங்கை- பாகிஸ்தான் இடையே கண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி
ஒருதினப் போட்டி: பிப்ரவரி 15, 1994 அன்று இலங்கை- இந்தியா இடையே ராஜ்கோட்டில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: அக்டோபர் 8, 2005 அன்று கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப் - குருநேகலா யூத் கிரிக்கெட் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சின் நம்பிக்கை நட்சத்திரம். இலங்கை அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுபவர். இவர் அணியின் தொடக்க பந்துவீச்சாளராக ஆடுபவர். இடதுகை பேட்ஸ்மேனாகவும், ஓரளவு திறமையை வெளிக்காட்டும் சகலதுறை (allrounder) ஆட்டக்காரர்.

 

கொழும்பு புனித யோசப் கல்லூரியில் கல்விகற்ற வாஸ் 1994 இல் இலங்கை அணியில் இடம்பிடித்தார். பிப்ரவரி 15, 1994 அன்று இலங்கை- இந்தியா இடையே ராஜ்கோட்டில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் இவர் முதன் முதலாக சர்வதேச ஒருதினப் போட்டிகளில் அறிமுகமானார்.

 

டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக இவர் ஆகஸ்ட் 26- 28, 1994 அன்று இலங்கை- பாகிஸ்தான் இடையே கண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

 

1994-ல் இலங்கை அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருதினப்போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும், ஒரு தினப்போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

 

இவர் அணியில் சேர்ந்த ஒரு வருடத்தில் இலங்கை அணி முதன் முதலாக அந்நிய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்று காட்டியது. இதற்கு சமிந்தா வாஸ் பக்கபலமாக இருந்தார்.

 

1995-மார்ச்சில் இலங்கை அணி நியுசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையே நேப்பியரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வாஸ் அபாரமாக பந்து வீசி முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 43 ரன்கள் கொடுத்து 5விக்கெட்டுகளும் எடுத்து இலங்கையின் வெற்றிக்கு உறுதிணையாக இருந்தார். இரண்டாவது டெஸ்டில் அபாரமாக பந்துவீசி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி, டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது அரைசதத்தை விளாசினார். இத்தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.

 

2001வருடத்தின் பிற்பகுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை சாய்த்தார். இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். இத்தொடரை இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.

 

2001-02-ல் ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்தது. இரு அணிகளுக்கும் இடையே டிசம்பர் 18, 2001, கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருதினப்போட்டியில் 19 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியது மட்டுமின்றி, ஒருதினப் போட்டிகளில் இவரது சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்தார். மேலும் இப்போட்டியில் முதன்முதலாக ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

 

2003 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலககோப்பை வரலாற்றில், முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்.

 

பந்துவீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் கலக்குபவர். இவர் இதுவரை டெஸ்டில் 13 அரை சதங்களும், 1 அபார சதமும் விளாசியுள்ளார். வங்கதேச அணிக்கெதிராக 25, ஜுன் 2007-ல், கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தன் முதல் சதத்தை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார்.

 

319 ஒருதினப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1 அரை சதம் உள்பட 2008 ரன்கள் எடுத்துள்ளார். 398 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருதினப் போட்டிகளில் இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 40 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார். முரளிதரன் 475 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

 

106 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள இவர், 1 சதம், 13 அரைசதங்கள் உள்பட 2951 ரன்கள் எடுத்துள்ளார். 347 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

வெளியான தேதி: 6 ஆகஸ்டு 2008.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive