CricketArchive

2-வது ஒருதினப் போட்டி: இந்தியா வெற்றி..!
by CricketArchive


Scorecard:Sri Lanka v India
Player:Z Khan
Event:India in Sri Lanka 2008

DateLine: 20th August 2008

 

வணக்கம்,

 

தம்புல்லா மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருதினப் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மேலும், முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு இப்போட்டியில் வென்று பழிதீர்த்துக் கொண்டது.

 

இலங்கை சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.

 

இத்தொடரின் முதல் ஒருதினப்போட்டி, இலங்கையில் உள்ள தம்புல்லா மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று, இதே மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருதினப் போட்டி துவங்கியது.

 

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான கௌதம் காம்பீருக்கு பயிற்சியின் போது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் களமிறங்கவில்லை. மேலும் கடந்த போட்டியில் விளையாடிய பிரக்யான் ஓஜாவும் களமிறக்கப்படவில்லை. இவர்களுக்கு பதிலாக பிரவீண் குமாரும், தமிழக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத்தும் களமிறங்கினர்.

 

தமிழக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் களமிறங்கும் முதல் சர்வதேசப் போட்டி இது என்பதும், இந்தியாவின் சார்பில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகும் 176-வது ஒருதின வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

 

அதே போல இலங்கை அணியில் சமிந்தா வாஸிற்கு பதிலாக தில்ஹாரா பெர்ணான்டோ களமிறங்கினார்.

 

பூவா தலையா வென்ற வென்ற இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு சனத் ஜெயசூர்யாவும், சங்ககாராவும் நிதானமான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க முனைந்தனர். ஆனால் ஜாகீர்கானின் பந்து வீச்சிற்கு முன் அவர்களால் நிலையாக ஆடமுடியவில்லை.

 

சங்ககாரா 2 ரன்கள் எடுத்திருந்த போதும், இலங்கை அணியின் கேப்டன் மஹேல ஜெயவர்தனே 2 ரன்கள் எடுத்திருந்த போதும், கபுகேதரா ரன்கள் ஏதும் எடுக்காமலிருந்த போதும், சனத் ஜெயசூர்யா 10 ரன்கள் எடுத்திருந்த போதும் ஜாகீர்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். சமரசில்வா ரன் ஏதும் எடுக்காத நிலையில் பிரவீண் குமார் பந்துவீச்சில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் நிலைத்து ஆட முயன்ற தில்ஷான் 16 ரன்கள் எடுத்திருந்த போது இர்பான் பதான் பந்து வீச்சில் பத்ரிநாத்தின் பிடி கொடுத்து வெளியேறினார்.

 

இப்படி முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 17.2 ஓவர்களில் 44 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. 100 ரன்களை இலங்கை அணி தாண்டுமா என்று சந்தேகம் வந்து விட்டது.

 

ஆனால் அந்த சந்தேகத்தை பின்னால் வந்த டெயிலெண்டர்கள் போக்கினர்.

 

7 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குலசேகராவும், மிரான்டோவும் இந்திய பந்து வீச்சாளர்களை திணறடித்து, அணி 100 ரன்களைக் கடக்க உதவினர். அந்த அணியின் எண்ணிக்கை 118 ஆக இருந்த போது குலசேகரா 25 ரன்களிலும், மிரான்டோ 44 ரன்களிலும் வெளியேறினர். மிரான்டோ இப்போட்டியில், ஒருதின அரங்கில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார்.

 

இவர்களையடுத்து வந்த மெண்டிஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஹர்பஜன்சிங் சுழலில், அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டிற்கு பெர்ணான்டோவும், முரளிதரனும் இணைந்து பங்காளி ஆட்டம் ஆடினர். பெர்ணான்டோ 12 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்பஜன்சிங் சுழலில் விராட் கோஹ்லியிடம் பிடிகொடுத்து வெளியேறினார். முரளிதரன் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

முடிவில் இலங்கை அணி 38.3 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

இந்திய தரப்பில் ஜாகீர்கான் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், பிரவீண் குமார் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டுகளையும், இர்பான் பதான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக இர்பான் பதானும், விராட் கோஹ்லியும் வந்தனர். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் இர்பான் பதான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து சுரேஷ் ரெய்னா ஆட்டத்தின் 5 வது ஓவரில் 1ரன் எடுத்த திருப்தியில் வெளியேறினார். இந்த இரு விக்கெட்டுகளையும் குலசேகரா வீழ்த்தினார்.

 

இவரையடுத்து விராட் கோஹ்லியுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். யுவராஜ் சிங் 20 ரன்கள் எடுத்திருந்தபோது மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தார். இவரையடுத்து வந்த ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து விராட் கோஹ்லியுடன் இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி ஜோடி சேர்ந்தார். மிக நிதானமாக ஆடிய விராட் கோஹ்லி 67 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட 37 ரன்கள் எடுத்திருந்த போது மிரான்டோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

 

இவரையடுத்து தோனியுடன், இன்றைய அறிமுக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் ஜோடி சேர்ந்தார். இருவரும் மிக நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கையை மெதுவாக உயர்த்தினர்.

 

கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய தோனி 39 ரன்கள் எடுத்து பெர்னாண்டோ பந்து வீச்சில் வெளியேறினார். தன்னை வெளியேற்றிய ஹர்பஜன்சிங் 1 ரன் எடுத்திருந்த போது, அவரை அஜந்தா மெண்டிஸ் வெளியேற்றி பழி தீர்த்துக் கொண்டார்.

 

முடிவில் இந்திய அணி 39.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

சிறப்பாக ஆடிய சுப்ரமணியம் பத்ரிநாத் 27 ரன்களுடனும், ஜாகிர்கான் 2 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

இலங்கை அணி தரப்பில் நுவன் குலசேகரா, அஜந்தா மெண்டிஸ், மிரான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பெர்னாண்டோ தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

இதனால் 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருதினப் போட்டி வரும் ஆகஸ்டு 24-ம் தேதி கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது

 

ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் ஜாகிர்கான் தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் 16 பவுண்டரிகளும், இந்திய அணி சார்பில் 15 பவுண்டரிகளும் அடிக்கப்பட்டன. இப்போட்டியில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.,

 

நன்றி, வணக்கம்.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive