CricketArchive

மும்பையை சாய்த்த டெல்லி அணி
by CricketArchive


Scorecard:Delhi Daredevils v Mumbai Indians
Player:KD Karthik
Event:Indian Premier League 2007/08

DateLine: 26th May 2008

 

போட்டி: 20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 50-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்: பெரோஷ் ஷா கோட்லா மைதானம். டெல்லி.
தேதி: 24.05.2008. சனிக் கிழமை.
மோதிய அணிகள்: டெல்லி அணி - டெக்கான் அணி
முடிவு: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
ஆட்ட நாயகன்: தினேஷ் கார்த்திக்

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 50-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு தில்லியிலுள்ள பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி அணியும் மும்பை அணியும் மோதின.

கடந்த போட்டியில் விளையாடிய மும்பை வீரர்களான தில்ஹாரா பெர்னாண்டோ, விக்ராந்த் யெலிகடி ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆந்ரே நெல், தவால் குல்கர்னி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

அதே போல கடந்த போட்டியில் விளையாடிய டெல்லி வீரர்களான டி வில்லியர்ஸ், ரஜத் பாடியா, சங்வான் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக மனோஜ் திவாரி, பிரெட் கீவ்ஸ், அமித் மிஸ்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

பூவா தலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக சனத் ஜெயசூர்யாவும் மும்பை அணியின் கேப்டன் சச்சின் தெண்டுல்கரும் களமிறங்கினர்.

இருவரும் ஆரம்பம் முதலே தங்களது அதிரடியை காட்டத் தொடங்கினர்.

கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய சச்சின் தெண்டுல்கர், இப்போட்டியில் 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் உள்பட 18 ரன்கள் எடுத்திருந்த போது யோமகேஷ் பந்து வீச்சில் ஸ்டம்புகளை பறி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து ஜெயசூர்யாவுடன் ஜோடி சேர்ந்த டிவைன் ஸ்மித், வந்த வேகத்தில் 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த ராபின் உத்தப்பா, ஜெயசூர்யாவுடன் ஜோடி சேர்ந்து எதிரணியின் பந்துவீச்சை விரட்டியடித்தார்.

ஒருபுறம் டெல்லி அணியின் பந்துவீச்சை வாணவேடிக்கை காட்டிக் கொண்டிருந்த ஜெயசூர்யா 42 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் எடுத்திருந்த போது அமித் மிஸ்ரா பந்து வீச்சில் தில்ஷானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஜெயசூர்யா ஆட்டமிழந்தபோது மும்பை அணி 13.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது.

இவரையடுத்து ராபின் உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அபிஷேக் நாயர் 2 ரன்களும், ஷான் பொல்லாக் 16 ரன்களும், சித்தார்த் சிட்னிஸ் 3 ரன்களும், பீனல் ஷா, ஆந்ரே நெல் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் கடைசிவரை நிலைத்து நின்று ஆடிய ராபின் உத்தப்பா 23 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 46 ரன்கள் எடுத்தார்.

மும்பை அணி ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணி சார்பில் யோ மகேஷ் 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மஹரூப், பிரெட் கீவ்ஸ், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதையடுத்து 20 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெல்லி அணி களமிறங்கியது.

டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமான வீரேந்திர ஷேவாக் 6 பந்துகளில் ஓரு சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவரையடுத்து கௌதம் காம்பீரும் 9 பந்துகளில் ஓரு சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இவர்களையடுத்து களமிறங்கிய ஷீகர் தவானும், மனோஜ் திவாரியும் தங்கள் பங்கிற்கு அடித்து ஆடினர். ஆனால் அவர்களும் அதிக நேரம் களத்தில் நீடிக்கவில்லை.

ஷீகர் தவான் 27 ரன்களில் ஆட்டமிழக்க, இவரையடுத்து வந்த தில்ஷானும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க டெல்லி அணி நெருக்கடிக்கு ஆளானது.

தில்ஷான் ஆட்டமிழந்தபோது டெல்லி அணி 10.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்நிலையில் மனோஜ் திவாரியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து மும்பை அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.

சிறப்பாக ஆடிய மனோஜ் திவாரி 36 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

11 ஓவர் முடிவில் 90 ரன்களாக இருந்த அணியின் எண்ணிக்கையை இவர்களிருவரும் சேர்ந்து 15 ஓவர் முடிவில் 130 ஆக உயர்த்தினர்.

இன்னும் 30 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டெல்லி அணி இருந்தது.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்குடன், மஹரூப் ஜோடி சேர்ந்தார். இவர்களிருவரும் நம்பிக்கையுடன் போராடி அணியை வெற்றிபெற வைத்தனர்.

கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆஷிஷ் நெஹ்ரா பந்து வீசினார். முதல் மூன்று பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இன்னும் மூன்று பந்துகளில் 6 ரன்கள் தேவை. 4 வது பந்தை எதிர் கொண்ட மஹரூப் அதை பவுண்டரிக்கு விரட்டினார். இதையடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார்.

தினேஷ் கார்த்திக் 32 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தும், மஹரூப் 13 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முடிவில் டெல்லி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை அணி சார்பில் டிவைன் ஸ்மித் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் மிக மோசமாகப் பந்துவீசினர். டிவைன் ஸ்மித் 3 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஷிஷ் நெஹ்ரா, ஆந்ரே நெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

டெல்லி அணிக்கு வெற்றி தேடித் தந்த அந்த அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டெல்லி அணியின் கேப்டன் வீரேந்திர ஷேவாக் கூறியதாவது: மும்பை அணிக்கு எதிரான கடைசி தகுதிச் சுற்று ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆட்டத்தில் நானும் கம்பீரும் சோபிக்கத் தவறிய நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர்.

குறிப்பாக தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடி, அணிக்கு கௌரவம் அளித்தார். இக்கட்டான நிலையில் அவர் சிறப்பாக ஆடியதற்கு கடவுளுக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்த வெற்றியால் அரையிறுதி வாய்ப்பு உறுதி எனக் கூற முடியாது. ஆனால், அதற்கான நம்பிக்கையுடன் தகுதிச் சுற்று ஆட்டங்களை முடித்துள்ளோம் என்றார் ஷேவாக்.

இந்த ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியுற்றதால் அடுத்து வரும் 2 தகுதிச் சுற்று ஆட்டங்களிலும் அந்த அணி கட்டாயம் வெற்றி பெற்றால்தான் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

நன்றி, வணக்கம்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive