| Ground: | Shere Bangla National Stadium, Mirpur |
| Scorecard: | India v Pakistan |
| Event: | Kitply Cup 2008 |
DateLine: 14th June 2008
போட்டி: 50 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி)
இடம: ஷேரே பங்ளா நேஷனல் மைதானம். மிர்பூர்.
தேதி: 14.06.2008. வெள்ளிக்கிழமை.
மோதிய அணிகள: பாகிஸ்தான் அணி - இந்திய அணி
முடிவு: 25 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி
ஆட்ட நாயகன்: யூனிஸ் கான்.
 
வணக்கம்
 
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனது. இதனால் கிட்பிளை கோப்பையை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. 
சோயிப் அக்தருக்கு தடை, போதை மருந்து பிரச்னையில் முகமது ஆசிப், வீரர்கள் உறவில் விரிசல் போன்ற சர்ச்சைகளை கடந்து சாதித்துள்ளது பாகிஸ்தான் அணி. இந்திய அணியின் இறுதிப் போட்டி சொதப்பல் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. மிக முக்கியமான போட்டியில் பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் சொதப்பியதால் கோப்பை வாய்ப்பை பரிதாபமாக இழந்தது இந்திய அணி. 
வங்கதேசத்தில் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்தது. தகுதிச் சுற்றில் இரண்டு தோல்விகள் அடைந்த வங்கதேசம் வெளியேறியது. இன்று பிற்பகல் மிர்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 
இந்திய அணியில் ஆர்.பி.சிங் நீக்கப்பட்டு, இஷாந்த் சர்மா வாய்ப்பு பெற்றார். 
பூவா, தலையா வென்ற பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மழை காரணமாக ஆட்டம் துவங்குவதில் சிறிது நேரம் தாமதமானது. 
பின்னர் ஆட்டம் துவங்கியதும் கம்ரான் அக்மல், சல்மான் பட் இணைந்து பாகிஸ்தான் அணிக்கு நிதான துவக்கம் தந்தனர். இர்பான் பதான் வேகத்தில் கம்ரான் அக்மல் 15 ரன்களுடன் வெளியேறினார். 
இதற்கு பின் யூனிஸ் கான், சல்மான் பட் சேர்ந்து விவேகமாக விளையாடினர். முதலில் மந்தமாக ஆடிய இவர்கள், போகப் போக அதிவிரைவாக ரன்களை சேர்த்தனர். இவர்களை பிரிக்க கேப்டன் தோனி மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. 
சுழற்பந்து வீச்சாளர்களை யூனிஸ் கான் அற்புதமாக சமாளித்தார். சேவக், பியுஸ் சாவ்லா பந்துகளில் இமாலய சிக்சர்கள் அடித்து அசத்தினார். 
மறுபக்கம் அபார ஆட்டத்தை தொடர்ந்த சல்மான் பட் ஒரு நாள் அரங்கில் 7வது சதம் கடந்தார். இது இந்தியாவுக்கு எதிராக இவரது 5வது சதமாக அமைந்தது. 
கடந்த இரண்டு போட்டிகளில் 0 ரன்களில் ஆட்டமிழந்த யூனிஸ் கான் இப்போட்டியில் அதற்கு பரிகாரம் தேடிக் கொண்டார். இவர் ஒரு நாள் அரங்கில் 4வது சதம் கடந்து அசத்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 205 ரன்கள் சேர்த்த நிலையில், யூனிஸ் கான் 99 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 108 ரன்கள் எடுத்திருந்த போது, இஷாந்த் சர்மா பந்து வீச்சில் வீழ்ந்தார். 
கால் பகுதியில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக சல்மான் பட் 136 பந்துகளில் 12 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 129 ரன்களுடன் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். 
அதிரடியாக விளையாடிய மிஸ்பா உல் ஹக் 21 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 33 ரன்கள் விளாசினார். 300 ரன்கள் என்ற திட்டத்துடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. முதல் 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் தான் அந்த அணி எடுத்து இருந்தது. பின்னர் சல்மான் பட், யூனிஸ் கான் அதிரடியால்... கடைசி 30 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்து அசத்தியது. 
இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது. அப்ரிதி 10 ரன்களுடனும், கேப்டன் சோயப் மாலிக் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. சோகைல் தன்வீர் வேகத்தில் சேவக் 2 ரன்கள் எடுத்த திருப்தியில் நடையை கட்டினார். உமர் குல்லும் தன் பங்கிற்கு இந்திய வீரர்களை மிரட்டினார். 
கௌதம் காம்பிர் 40 ரன்கள் எடுத்திருந்த போதும், ரோஹித் சர்மா 24 ரன்கள் எடுத்திருந்த போதும் உமர்குல் பந்து வீச்சில் வெளியேறினர். 
யூசுப் பதானும் 25 ரன்களோடு ஆட்டமிழந்தார். இப்படி முன்வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணியின் நிலைமை பரிதாபமானது. 
இதற்கு பின் யுவராஜ் சிங்கும், சுரேஷ் ரெய்னாவும் இணைந்து அணியை மீட்க போராடினர். ரெய்னா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்த யுவராஜ் சிங் 59 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 56 ரன்கள் எடுத்திருந்த போது அப்ரிதி சுழலில் சிக்க, நெருக்கடி ஆரம்பமானது. 
இர்பான் பதான் 28 ரன்கள் எடுத்தார். தனிநபராக போராடிய கேப்டன் தோனி ஒரு நாள் அரங்கில் 20வது அரைசதம் கடந்தார். கடைசி 2 ஓவரில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. கைவசம் ஒரு விக்கெட் தான் இருந்தது. 
49வது ஓவரை அப்ரிதி வீசினார். இன்னும் 12 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை. முதல் பந்தில் சிக்சர் அடித்து பரபரப்பு ஏற்படுத்தினார் தோனி. அடுத்த பந்தையும் சிக்சருக்கு அடிக்க முனைந்தார். ஆனால் அந்த பந்து சரியாக நஸீர் கையில் தஞ்சமடைய இந்திய அணியின் கோப்பை கனவு தகர்ந்தது.தோனி 59 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 
இதன் மூலம் தகுதிச் சுற்றில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான், கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக யூனிஸ் கானும், தொடர் நாயகனாக சல்மான் பட்டும் தேர்வு செய்யப்பட்டனர். 
இப்போட்டியில் படுமோசமாக பந்து வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா 10 ஓவர்களில் 85 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இது தான் ஒரு நாள் அரங்கில் இந்திய வீரர் ஒருவரின் மூன்றாவது மோசமான பந்துவீச்சு ஆகும். முதலிரண்டு இடத்தில் ஸ்ரீநாத் 87 ரன்களுடனும், திருநாவுக்கரசு குமரன் 86 ரன்களுடனும் உள்ளனர். 
இன்றைய போட்டியில் சிறப்பாக பேட் செய்த யூனிஸ் கான், சல்மான் பட் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த மோசின் கான், ஜாகிர் அப்பாஸ் ஜோடியின் சாதனையை 26 ஆண்டுகளுக்கு பின் சமன் செய்தது. 
இந்திய வீரர் கௌதம் காம்பிருக்கு இது 50வது ஒரு நாள் போட்டியாகும். இவர் இதுவரை 5 சதம், 8 அரைசதம் உள்பட 1692 ரன்கள் எடுத்துள்ளார். 
நன்றி, வணக்கம்.

