CricketArchive

முதல் டெஸ்ட்: இலங்கை அபார வெற்றி
by CricketArchive


Scorecard:Sri Lanka v India
Event:India in Sri Lanka 2008

DateLine: 26th July 2008

 

வணக்கம்.

 

கொழும்புவில் இலங்கை அணியும், இந்திய அணியும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை 1 இன்னிங்ஸ், 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் வீழ்ச்சிக்கு இலங்கை சுழற்பந்து பூதங்களான முத்தையா முரளிதரனும், அஜந்தா மெண்டிஸும் காரணமாக இருந்தனர்.

 

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

 

இந்த அரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 23-ம் தேதி கொழும்புவில் துவங்கியது.

 

முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 600 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இலங்கை அணி தரப்பில் வர்ணபுரா 115 ரன்களும், அணியின் கேப்டன் மஹேல ஜெயவர்தனே 136 ரன்களும், திலன் சமரவீரா 127, திலகரத்னே தில்ஷான் 125* ரன்களும் குவித்தனர்.

 

இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா, ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்திருந்தது. லட்சுமண் 19 ரன்களும், கும்ப்ளே 1ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

 

இன்று தனது நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது. இன்றாவது சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 

ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் கும்ப்ளே 1ரன் எடுத்த திருப்தியில் அஜந்தா மெண்டிஸ் சுழலில் வீழ்ந்தார். இவரையடுத்து வந்த ஹர்பஜன்சிங் 9 ரன்களும், ஜாகீர்கான் 5 ரன்களும் எடுத்து வீழந்தனர்.

 

இவர்களையடுத்து லட்சுமணுடன் இஷாந்த் சர்மா ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடினார். இவரது ஒத்துழைப்பால் லட்சுமண் தனது 34வது அரை சதத்தைக் கடந்தார். இவர் 56 ரன்கள் எடுத்திருந்த போது மெண்டிஸ் சுழலில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். இஷாந்த் சர்மா 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் பாலோ ஆன் பெற்றது.

 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணியை முத்தையா முரளிதரனும், அஜந்தா மெண்டிஸும் தங்களது சுழல்வீச்சால் சுழற்றி எறிந்தனர்.

 

வீரேந்திர ஷேவாக் 13 ரன்களும், கௌதம் காம்பீர் 43 ரன்களும், வி.வி.எஸ். லட்சுமண் 21 ரன்களும், சச்சின் 12 ரன்களும், திராவிட் 10 ரன்களும், கங்குலி 4 ரன்களும், தினேஷ் கார்த்திக் 0 ரன்களும், அனில் கும்ப்ளே 12 ரன்களும், ஹர்பஜன்சிங் 15 ரன்களும், ஜாகீர்கான் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 1 இன்னிங்ஸ், 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் (இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து) முரளிதரன் 11 விக்கெட்டுகளையும், அஜந்தா மெண்டிஸ் 8 விக்கெட்டுகளையும், நுவன் குலசேகரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

அஜந்தா மெண்டிஸ் தான் அறிமுகமான முதல் டெஸ்டிலேயே 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முத்தையா முரளிதரன் இப்போட்டியில் எடுத்த 11 விக்கெட்டுகளையும் சேர்த்து மொத்தம் 746 விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார். 750 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற இலக்கை அடைவதற்கு அவருக்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.

 

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக முரளிதரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் இவர் 19-வது முறையாக ஆட்டநாயகன் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதல் இன்னிங்ஸிலும் சரி, இரண்டாவது இன்னிங்ஸிலும் சரி இந்திய வீரர்கள் சுழல்பந்துகளில்தான் சுருண்டனர். நீண்ட இடைவெளிக்குப்பிறகு அணியில் இடம்பிடித்த வீரர்கள் யாரும், தங்களுக்கு அளித்த வாய்ப்புகளை பயன்படுத்தத் தவறிவிட்டனர். இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக ஆடவில்லை. பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்படவில்லை. அணியினரின் பீல்டிங்கும் படு மோசமாக இருந்தது. இவைகளே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்றால் அது மிகையல்ல.

 

இவ்வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி வரும் 31-ம் தேதி காலேவில் நடைபெற உள்ளது.

 

நன்றி, வணக்கம்

 


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive