CricketArchive

2வது டெஸ்ட்: மூன்றாம் நாள் - இந்தியா 200/4
by CricketArchive


Scorecard:Sri Lanka v India
Event:India in Sri Lanka 2008

DateLine: 2nd August 2008

 

வணக்கம். காலேவில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருந்தபோது மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுற்றது. இதனால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 237 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிிறது. கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலேவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

 

முதலில் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. மஹேல ஜெயவர்தனே 46 ரன்களுடனும், இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிரசன்ன ஜெயவர்தனே 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

 

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. ஆட்டம் துவங்கிய சிலநிமிடங்களில் மஹேல ஜெயவர்தனே 98 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட தனது 31வது அரை சதத்தை பதிவு செய்தார். அதன்பிறகு, இரண்டு ஜெயவர்தனேக்களும் மிகப் பொறுமையாக ஆடினர். ஆனால் இவர்களது முயற்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பிரசன்ன ஜெயவர்தனே 24 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன்சிங் சுழலில், வி.வி.எஸ். லட்சுமணிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இவரை தனது திறமையான பிடி(catch)யால் ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், டெஸட் அரங்கில் 100 விக்கெட்டுகளை தனது திறமையான பிடி(catch)யால் வெளியேறச் செய்தவர் என்ற பெருமையை வி.வி.எஸ். லட்சுமண் பெற்றார்.

 

அடுத்து வந்த சமிந்தா வாஸ் 1 ரன் எடுத்திருந்த நிலையில் அனில் கும்ப்ளேவின் சுழலில் வீழ்ந்தார். இத்தொடரில் கும்ப்ளே வீழத்தும் முதல் விக்கெட் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதையடுத்து மஹேல ஜெயவர்தனேவுடன், குலசேகரா ஜோடி சேர்ந்தார். நிலையை புரிந்து கொண்ட மஹேல ஜெயவர்தனே குலசேகராவை அதிகம் பேட்டிங் செய்யவிடாமல் பார்த்துக் கொண்டார். அவரை மறுமுனையில் நிற்கவைத்து தனி ஆளாக நின்று இந்திய பந்துவீச்சை சமாளித்தார் மஹேல ஜெயவர்தனே. ஆனால் அவராலும் நிலைத்து நிற்க முடியவில்லை. அவர் 86 ரன்கள் எடுத்திருந்தபோது அனில் கும்ப்ளே பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் கொடுத்த பிடியை ஏற்கனவே ஒருமுறை தவறவிட்ட தினேஷ் கார்த்திக் இம்முறை சரியாக பிடித்தார்.

 

இவரையடுத்து வந்த மெண்டிஸ், கும்ப்ளேவின் சுழலிலும், முரளிதரன் ஹர்பஜன்சிங் சுழலிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். குலசேகரா 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஹர்பஜன்சிங் 102 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அனில் கும்ப்ளே 3 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

இப்போட்டியையும் சேர்த்து 22-வது முறையாக 5 (அதற்கும் மேல்) விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்பஜன்சிங்.

 

இதையடுத்து 37 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி துவக்கியது.

 

துவக்க வீரர்களாக வீரேந்திர ஷேவாக்கும், கௌதம் காம்பீரும் களமிறங்கினர். ஷேவாக் வழக்கம் போல் அதிரடியாக ஆடினார். கௌதம் காம்பீர் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

 

ஒருதினப்போட்டிபோல் ஆடிய ஷேவாக் இலங்கை வீரர்களின் பந்துவீச்சை பந்து வீச்சை விரட்டியடித்தார். 52 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் உள்பட தனது 14வது அரைசதத்தைக் கடந்தார். அரை சதம் அடித்ததும் வாஸ் வீசிய பந்தில் தில்ஷானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து கௌதம் காம்பீருடன் ராகுல் திராவிட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் விளையாடினர். சிறப்பாக ஆடிய காம்பீர் 84 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட தனது 5வது அரைசதத்தைக் கடந்தார். இப்போட்டியில் இவர் அடிக்கும் இரண்டாவது அரை சதமும் இதுவாகும்.

 

மறுமுனையில் இருந்த திராவிட் மிகுந்த கவனமுடன் விளையாடினார். கௌதம் காம்பீர் 149 பந்துகளில் 10 பவுண்டரிகள் உள்பட 76 ரன்கள் எடுத்திருந்தபோது மெண்டிஸ் சுழலில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.

 

இவரையடுத்து வந்த சச்சின் தெண்டுல்கர் திராவிட்டுடன் ஜோடி சேர்ந்தார். சச்சின் தெண்டுல்கர் ஒருதினப்போட்டி போல் ஆடினார். இந்த இன்னிங்ஸிலாவது சிறப்பாக ஆடி டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியிலில் முதலிடம் பிடிப்பார் என்ற இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை இப்போட்டியிலும் ஏமாற்றினார். இவர் 42 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது வாஸ் பந்துவீச்சில் மஹேல ஜெயவர்தனேவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

திராவிட் மிக நிதானமாக ஆடினார். அவர் 44 ரன்கள் எடுத்திருந்தபோது மரளிதரன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவரது கணக்கில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

 

சௌவுரவ் கங்குலியும், வி.வி.எஸ். லட்சுமணும் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்டது.

 

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து, 237 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை சார்பில் சமிந்தா வாஸ் 2 விக்கெட்டுகளையும், அஜந்தா மெண்டிஸ், முத்தையா முரளிதரன் ஆகியோர் தலா 1விக்கெட்டினையும் வீழ்த்தினர். இன்னும் 2 நாள் ஆட்டம் மீதம உள்ளது.

 

நன்றி, வணக்கம்

 


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive