CricketArchive

இந்தியா - இலங்கை 3-வது டெஸ்ட்: ஒரு பார்வை
by CricketArchive


Event:India in Sri Lanka 2008

DateLine: 7th August 2008

 

வணக்கம். இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. கொழும்புவில் நடைபெற்ற இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஓர் இன்னிங்ஸ் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காலேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை தோற்கடித்தது. இதனால், கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்டில், அடைந்த படுதோல்விக்கு பழிதீர்த்துக் கொண்ட இந்திய அணி, தொடரினை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் ஆகஸ்டு 8ம் தேதி கொழும்புவில் உள்ள சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் விளையாடவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவர்கள் அனைவரும் மைதானத்திற்குள் வருவமதும் போவதுமாகவே இருந்தனர். பந்து வீச்சையும் சொல்லவே வேண்டாம். நான்கு இலங்கை வீரர்கள் சதமடித்தனர் என்றால் சொல்லவா வேண்டும்.

 

இரண்டாவது டெஸ்டிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. ஆனால் இந்திய அணியின் துவக்க ஜோடி மட்டும் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

 

வீரேந்திர ஷேவாக், முதல் இன்னிங்ஸில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 251 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 50 ரன்களும் எடுத்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கௌதம் காம்பீர் முதல் இன்னிங்ஸில் 56 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 74 ரன்களும் எடுத்தார்.

 

இரு இன்னிங்ஸையும் சேர்த்து இந்திய அணி எடுத்தது 598 ரன்கள். இதில் துவக்க ஜோடி எடுத்த ரன்கள் 381 ஆகும். மீதம் உள்ள 271 ரன்கள் மீதமுள்ள வீரர்கள் எடுத்தது. முதல் டெஸ்டை பொலவே இரண்டாவது டெஸ்டிலும் இந்திய மும்மூர்த்திகளான சச்சின் தெண்டுல்கர், சௌவுரவ் கங்குலி, ராகுல் திராவிட் ஆகியோர் சொற்பரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

 

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர், முதல் டெஸ்டில் ஏமாற்றியது போல, இரண்டாவது டெஸ்டிலும் ஏமாற்றினார். இப்போட்டியிலாவது சிறப்பாக ஆடி டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என்ற நம்பிக்கையை பொய்யாக்கினார்.

 

விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் முதல் டெஸ்டில் செய்தது போல், இரண்டாவது டெஸ்டிலும் நிறைய தவறுகள் செய்தார். இந்திய அணிக்கு பேட்டிங் வரிசை கவலைக்கிடமாகவே உள்ளது. இவர்கள் மூன்றாவது போட்டியிலாவது திறமையை வெளிக்காட்டினால்தான் தொடரை வெல்ல முடியும். முதல் டெஸ்டில் மோசமாக பந்துவீசிய இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் வீறுகொண்டு எழுந்தது.

 

இப்போட்டியில் சுழலுக்கே அதிக விக்கெடுகள் கிடைத்தது. சிறப்பாக பந்து வீசிய ஹர்பஜன்சிங் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அனில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான் 2 விக்கெட்டினையும் கைப்பற்றினர். இருப்பினும் முக்கிய விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர். இதே திறமையை மூன்றாவது போட்டியிலும் இவர்கள் காட்டினால், இந்தியா வெற்றி பெறுவது உறுதி.

 

இலங்கை அணியை பொறுத்தவரை பேட்டிங் வரிசைக்கு வர்ணபுரா, சங்ககாரா, ஜெயவர்தனே, தில்ஷான், சமரவீரா ஆகியோர் உள்ளனர். வேகப்பந்து வீச்சுக்கு வாஸ், குலசேகரா...சுழல் பந்திற்கு முரளிதரனும், மெண்டிசும் உள்ளனர்.

 

தங்களது மாயாஜால சுழற்பந்துவீச்சில், இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தது இலங்கையின் முரளிதரன், மெண்டிஸ் கூட்டணி. முதல் டெஸ்டில் இவர்கள் 20 க்கு 19 விக்கெட்டுகளை வீழ்த்தினர், இரண்டாவது டெஸ்டில் 19 க்கு 15 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவர்களது சுழலை இந்திய வீரர்கள் சமாளிக்கத் திணறுகின்றனர்.

 

இந்நிலையில், (இரண்டாவது டெஸ்ட்) சொந்தமண்ணில் ஏற்பட்ட தோல்வியின் எதிரொலியாக இலங்கை கேப்டன் ஜெயவர்தனா அணியில் மாற்றம் செய்வது குறித்து தேர்வுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடாத சமிந்தா வாஸ், குலசேகரா, தொடக்க வீரர் வாண்தர்ட் ஆகியோர் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு பதிலாக தம்மிகா பிரசாத், தில்ஹாரா பெர்னான்டோ, திலன் துஷாரா ஆகியோர் இடம் பெறக்கூடும் எனத் தெரிகிறது.

 

1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் தற்போது சமநிலையில் உள்ளதால், கடைசி போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. தாயக மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் இலங்கை வீரர்கள் களமிறங்குகிறார்கள்.

 

இவர்களை இந்திய அணியினர் சமாளிக்க வேண்டும். அதிக ரன்களை குவிக்க வேண்டும். இந்தியப் புலிகள் எழுச்சி பெறுமா.. இலங்கை சிங்கங்களிடம் வீழுமா... மூன்றாம் டெஸ்டின் இறுதியில் அதற்கு விடை காண்போம். இத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட நடுவர் தீர்ப்பு (நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் உரிமை) இந்திய அணிக்கு பாதகமாகவே முடிந்தன. ஆனால், இலங்கை அணிக்கு சாதகமாகவே முடிந்தன. இதனை பற்றி இப்போது விமர்சனம் செய்ய முடியாது என்பதால் இத்தொடர் முடிந்ததும் அதைப்பற்றி ஒரு முடிவு கிடைக்கும் என எதிர் பார்க்கலாம்.

 

இந்தியாவும் இலங்கையும் இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 11 போட்டியிலும், இலங்கை 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன 13 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

 

இந்தியாவில் 14 டெஸ்ட் போட்டிகள் இலங்கைக்கு எதிராக நடைபெற்றுள்ளன. இவற்றில் இந்தியா 8-ல் வென்றுள்ளது. இலங்கை அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 6 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

 

இலங்கையில், இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற 14 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 3 போட்டிகளிலும், இலங்கை 4 போட்டிகளிலும் வென்றுள்ளன. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச எண்ணிக்கை, 1986, கான்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவானது. இதில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 676 ரன்கள் குவித்து, டிக்ளேர் செய்தது. மிகக் குறைவான எண்ணிக்கை 2005, சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவானது. இதில் 167 ரன்களில் ஆட்டமிழந்தது.

 

இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச எண்ணிக்கை, 1997, கொழும்புவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவானது. இதில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 952 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மிகக் குறைவான எண்ணிக்கை 1990, சண்டிகாரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவானது. இதில் 82 ரன்களில் ஆட்டமிழந்தது.

 

இலங்கைக்கு எதிராக சச்சின் தெண்டுல்கர் அதிகபட்சமாக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1388 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 சதங்களும், 3 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 148 ரன்கள் அடித்துள்ளார். அனில் கும்ப்ளே 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

இந்தியாவிற்கு எதிராக அரவிந்த டிசில்வா 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1252 ரன்கள் குவித்துள்ளார். இதில் இதில் 5 சதங்களும், 3 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 148 ரன்கள் அடித்துள்ளார். பந்துவீச்சில், முரளிதரன் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

இலங்கை அணிக்கு எதிராக இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக் ஜூலை 31, 2008-ல், காலேவில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக, (ஆட்டமிழக்காமல்) 201* ரன்கள் எடுத்தார்.

 

இந்தியாவிற்கு எதிராக இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா, 2, ஆகஸ்டு 1997-ல், கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக 340 ரன்கள் குவித்தார்.

 

இலங்கைக்கு எதிராக இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா 27, டிசம்பர் 1986-ல், நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் 51 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும்.

 

இந்தியாவிற்கு எதிராக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 29, ஆகஸ்டு 2001-ல், கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் 87 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும்.

 

மூன்றாவது டெஸ்டில் இந்திய வீரர்கள் வரிசையில் மாற்றம் இருக்கலாம். இலங்கை அணியிலும் மாற்றம் இருக்கலாம்.

 

இந்திய அணி: அனில் கும்ப்ளே (கேப்டன்), சச்சின் தெண்டுல்கர், சௌவுரவ் கங்குலி, ராகுல் திராவிட், வீரேந்திர ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், கௌதம் காம்பிர், ரோஹித் சர்மா, பார்த்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஜாகீர்கான், ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, பிரக்யான் ஓஜா, முனாப் படேல். ஆர்.பி.சிங்.

 

இலங்கை அணி: வான்டார்ட், வர்ணபுரா, குமார் சங்ககாரா, மஹேல ஜெயவர்தனே (கேப்டன்), திலன் சமரவீரா, சமரசில்வா, திலகரத்னே தில்ஷன், பிரசன்னா ஜெயவர்தனா (விக்கெட் கீப்பர்), சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், திலன் துஷாரா, நுรตவன் குலசேகரா, சமரா கபுகேதரா.

 

காத்திருக்கும் சாதனை டெஸ்ட் அரங்கில் 11,953 ரன்களுடன் அதிக ரன் எடுத்த வீரர் என்ற மேற்கிந்தித் தீவுகள் அணி வீரர் லாராவின் சாதனையை முறியடிப்பதற்கு, இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு இன்னும் 98 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது, சச்சின் 11,857 ரன்களுடன், இப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். (இப்போட்டியிலாவது அவர் சாதிப்பார் என நம்புவோம்.)

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive