CricketArchive

3வது டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி
by CricketArchive


Scorecard:Sri Lanka v India
Event:India in Sri Lanka 2008

DateLine: 11th August 2008

 

வணக்கம்.

 

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாத்தில் இந்திய அணியை தோற்கடித்து, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.

 

இந்த அரு அணிகளுக்கும் இடையே, கொழும்புவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. காலேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

 

முன்னதாக ஆடிய இந்திய அணி இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸை 249 ரன்களுக்குள் இழந்தது. இதையடுத்து ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 147 ரன்கள் முன்னிலை பெற்றது.

 

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின் போது, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. திராவிட் 46 ரன்களுடனும், லட்சுமண் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

 

இன்று காலை நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது. திராவிட்டும், லட்சுமணனும் இணைந்து நிதானமாக விளையாடினர்.

 

அபாரமாக ஆடிய திராவிட் 96 பந்துகளில் 4 பவுண்டரிகள் உள்பட தனது 52வது அரை சதத்தைக் கடந்தார். இவர் 68 ரன்கள் எடுத்திருந்தபோது மெண்டிஸ் சுழலில் மஹேல ஜெயவர்தனேவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

இவரையடுத்து வந்த இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு வந்த ஹர்பஜன்சிங் அதிரடியாக விளையாடினார். மூத்தவீரர்கள் சச்சின், கங்குலியை விட சிறப்பாக ஆடி 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் 5 பவுண்டரிகள் அடங்கும்.

 

ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் நிலைத்து ஆடிய லட்சுமண் தனது 35வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

 

ஹர்பஜனுக்குப் பிறகு வந்த ஜாகீர்கான் தேவையில்லாமல் ஓடி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருக்குப் பிறகு வந்த இஷாந்த் சர்மாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். வி.வி.எஸ். லட்சுமண் 61 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 268 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து, 121 ரன்கள் முன்னிலை பெற்றது.

 

இலங்கை சார்பில் மெண்டிஸ், முரளிதரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், தம்மிக பிரசாத் 2 விக்கெட்டுகளையும், வாஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

 

இதையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இலங்கை அணியின் இரண்டு விக்கெட்டுக்கள் ஆரம்பத்திலேயே வீழ்ந்தன.

 

வாண்டர்ட் 8 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன் சுழலிலும், சங்ககாரா 4 ரன்கள் எடுத்திருந்தபோது ஜாகிர்கான் வேகப்பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

 

இவர்களுக்குப் பிறகு வர்ணபுராவுடன் இலங்கை அணியின் கேப்டன் மஹேல ஜெயவர்தனே ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த இன்னிங்ஸில் தனது 4 வது அரை சதத்தை நிறைவு செய்த வர்ணபுரா 54 ரன்களும், 32 வது அரை சதத்தை நிறைவு செய்த மஹேல ஜெயவர்தனே 50 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

ஹர்பஜன் சிங், ஜாகீர்கான் ஆகியோர் தலா 1விக்கெட்டினை வீழ்த்தினர்.

 

இன்றைய சாதனை:-

 

@இந்திய வீரர் வி.வி.எஸ். லட்சுமண் 61 ரன்கள் எடுத்திருந்தபோது டெஸ்ட் அரங்கில் 6000 ரன்கள் என்ற மைல்கல்லை தொட்டார்.

 

@அறிமுகமான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நேற்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் படைத்தார். மேலும் இன்று ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தற்போதைய டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதனால் இத்தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

 

@ முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் குவித்த குமார் சஙக்காரா இப்போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

@இத்தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக் 344 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் பட்டியலில், 26 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் அஜந்தா மெண்டிஸ் உள்ளார்.

 

@ இத்தொடரில் நடைபெற்ற ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் நான்கே நாட்களில் முடிவுக்கு வந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

 

@டெஸ்ட் தொடர் முடிந்ததையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடர் வரும் 18-ம் தேதி, தம்புல்லா மைதானத்தில் துவங்குகிறது.

 

நன்றி, வணக்கம்


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive