CricketArchive

இந்திய- இலங்கை: ஒருதினப்போட்டி- ஓர் அலசல்
by CricketArchive


Event:India in Sri Lanka 2008

DateLine: 16th August 2008

 

வணக்கம்.

 

இந்திய-இலங்கை அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருதினத்தொடர் நாளை மறுநாள் இலங்கையிலுள்ள தம்புல்லா மைதானத்தில் துவங்க இருக்கிறது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரில் பங்கேற்று வருகிறது. முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

 

இந்தடெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துவக்க ஜோடியான வீரேந்திர ஷேவாக் மற்றும் கௌதம் காம்பீர் ஜோடி மட்டுமே சிறப்பாக விளையாடியது. ஷேவாக் ஒரு இரட்டைச்சதமும், ஒரு அரை சதமும், காம்பீர் 3 அரை சதங்களும் விளாசினர். அணியின் மும்மூர்த்திகள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர், சௌவுரவ் கங்குலி, ராகுல் திராவிட் ஆகியோரும் சொற்பரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் மட்டமே நம்பிக்கையூட்டினார். மற்றவர்கள் சோபிக்கத் தவறினர்.

 

ஓய்வு காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாடமல் இருந்த மஹேந்திரசிங் தோனி ஒருதினத் தொடரில் களமிறங்குகிறார். நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் 172 ரன்கள் விளாசி, தனது வரவை அநிரடியாக வெளிக்காட்டியுள்ளார் யுவராஜ்சிங். மேலும் 19 வயதுக்குள்பட்டோருக்கான அணியின் கேப்டனான விராட் கோஹ்லியும் இடம்பிடித்துள்ளார்.

 

இத்தொடரில் நடைபெற்ற 3-வது டெஸ்டின் போது இடது முழங்கையில் சச்சின் தெண்டுல்கருக்கு காயம் ஏற்பட்டது. இககாயம் குணமாக 2 முதல் 3 வாரங்கள் ஆகலாம் என்பதால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு தலைவலியாக உள்ளது. இர்பான் பதான், பிரவீண்குமார் ஆகியோர் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, முனாப் படேல், ஆர்.பி.சிங் ஆகியோர் அணியில் உள்ளதால் சற்று ஆறுதலடையலாம்.

 

இப்படி, மூத்த வீரர்கள் இல்லாத இளைஞர் பட்டாளமாக இந்திய ஒருதின அணி காட்சியளிக்கிறது.

 

இலங்கை அணியைப் பொறுத்த வரை அனைத்துமே சரிவிகிதத்தில் இருக்கிறது எனலாம். அதிரடி துவக்கத்திற்கு சனத் ஜெயசூர்யாவும், குமார் சங்ககாராவும் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ஜெயவர்தனே, கபுகேதரா, சமரசில்வா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. டெஸட் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ள சனத் ஜெயசூர்யா ஒருதினப் போட்டிகளில் களமிறங்குவது இலங்கை அணிக்கு கூடுதல் பலம். மேலும் அந்த அணி டெஸ்ட தொடரை வென்ற தெம்பிலும், தாயக ரசிகர்களின் ஆதரவோடும் களமிறங்குகிறது.

 

வேகப்பந்துவீச்சிற்கு வாஸ், குலசேகரா, தில்ஹாரா பெர்னாண்டோ ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சிற்கு, அறிமுகமான டெஸ்ட் தொடரில் அதிக (26) விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்த அஜந்தா மெண்டிஸ் உள்ளார். பக்க பலமாக முத்தையா முரளிதரன் உள்ளார்.

 

பயிற்சிப் போட்டியில் இலங்கை அணியின் இரு சுழற்பந்நு வீரர்களும் விளையாடவில்லை. இவர்களை நமது இளைஞர் படை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. டெஸ்ட் தொடரில் பெற்ற தோல்விக்கு பழிவாங்கும் விதமாக இந்திய அணி போராடும் என்பதால் இத்தொடரில் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது எனலாம்.

 

இந்திய அணியும் இலங்கை அணியும் முதன் முதலாக 1975-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் மோதின. அப்போட்டியில் இலங்கை அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இக்காலகட்டத்தில்தான் இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தது என்பது குறிப்பிடத் தக்கது.

 

இந்திய அணியும் இலங்கை அணியும் இதுவரை 101 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 52 ஆட்டங்களிலும், இலங்கை அணி 39 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டங்கள் கைவிடப்பட்டன.

 

இலங்கை அணிக்கு எதிராக இந்திய வீரர் மஹேந்திர சிங் தோனி அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் ஆவார். இவர் 2005/2006-ல், ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் எடுத்தார். மேலும் 1999-ல், டான்டனில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக சௌவுரவ் கங்குலி 183 ரன்கள் குவித்தார்.

 

இந்தியாவிற்கு எதிராக இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா, 2000/2001-ல், சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக 189 ரன்கள் குவித்தார்.

 

இலங்கைக்கு எதிராக இந்திய வீரர் ஆஷிஷ் நெஹ்ரா 2005-ல், கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் 59 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும்.

 

இந்தியாவிற்கு எதிராக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 2000/2001-ல், சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் 30 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்து வீச்சாகும்.

 

இலங்கை அணிக்கு எதிராக, மே 26, 1999 - அன்று டான்டனில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 6 விக்கெட் இழப்பிற்கு 376 ரன்கள் குவித்துள்ளது. அக்டோபர் 29, 2000 - அன்று சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் குறைந்தபட்சமாக 54 ரன்களில் இந்திய அணி ஆட்டமிழந்தது.

 

இந்திய அணிக்கு எதிராக, ஜூலை 3, 2008 - அன்று கராச்சியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி அதிகபட்சமாக 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்துள்ளது. ஏப்ரல் 8, 1984 - அன்று சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் குறைந்தபட்சமாக 96 ரன்களில் இலங்கை அணி ஆட்டமிழந்தது.

 

இந்திய அணி விவரம்: மஹேந்திரசிங் தோனி (கேப்டன்), வீரேந்திர ஷேவாக், கௌதம் காம்பிர், யுவராஜ்சிங் (துணை கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, பார்த்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), சுப்ரமணியம் பத்ரிநாத், இர்பான் பதான், பிரவீண் குமார், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, முனாப் படேல், ஆர்.பி.சிங்.

 

இலங்கை அணி விவரம்: மஹேல ஜெயவர்தனே (கேப்டன்), சனத் ஜெயசூர்யா, குமார் சங்ககாரா (விக்கெட் கீப்பர்), சமர கபுகேதரா, சமரசில்வா, திலகரத்னே தில்ஷான், சமிந்தா வாஸ், குஷால் வீரரத்னே, திலன் துஷாரா, நுவன் குலசேகரா, முத்தையா முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், மஹேல உடவாட்டே, தில்ஹாரா பெர்னாணெடோ.

 

ஒருதினப்போட்டிகளின் விவரம்: முதல் போட்டி ஆகஸ்டு 18-ஆம் தேதியும், 2-வது போட்டி ஆகஸ்டு 20-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளும் தம்புல்லா மைதானத்தில் பகல் ஆட்டமாக நடைபெற உள்ளது.

 

3-வது போட்டி ஆகஸ்டு 24-ஆம் தேதியும், 4-வது போட்டி ஆகஸ்டு 26-ஆம் தேதியும், 5-வது போட்டி ஆகஸ்டு 28-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இந்த கடைசி மூன்று போட்டிகளும் கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

 

காத்திருக்கும் சாதனை

 

@ இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான சமிந்தா வாஸ் ஒருதினப்போட்டிகளில் 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அடைவதற்கு இன்னும் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.

 

நன்றி, வணக்கம்.

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive