CricketArchive

இர்பான் பதான்
by CricketArchive


Player:IK Pathan

DateLine: 18th August 2008

 

முழுப்பெயர்: இர்பான் கான் பதான்

 

பிறப்பு: 27 அக்டோபர் 1984. பரோடா. குஜராத், இந்தியா.

 

மட்டை வீச்சு முறை: இடதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: இடதுகை மிதவேகப்பந்து வீச்சாளர்

 

அணியில் வீரரின் நிலை: ஆல்ரவுண்டர்

 

விளையாடிய அணிகள்: இந்தியா, பரோடா அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், மிடில்செக்ஸ்

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: டிசம்பர் 12-16, 2003 அன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடைபெற்ற போட்டி
ஒருதினப் போட்டி: ஜனவரி 9, 2004 அன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மெல்போர்னில் நடைபெற்ற போட்டி ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி:
ஜூன் 22, 2005 அன்று ஹாம்ப்ஷையர் - மிடில்செக்ஸ் இடையே சௌதாம்ப்டனில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி.

 

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர். சிறந்த, ஆக்ரோஷமான இடதுகை ஆட்டக்காரர். சிறந்த இடதுகை பந்து வீச்சாளர். பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் சரி இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில்தேவிற்கு அடுத்து, இந்திய அணிக்கு கிடைத்த ஆல்ரவுண்டர் இர்பான் பதான்.

 

2003-04 காலகட்டத்தில் இவர் முதன்முதாலாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானபோது இவருக்கு வயது 19 மட்டுமே. இவரது பந்து வீச்சு நுணுக்கம் அனைத்தும் புதுவிதமாக இருக்கும். இதே அணிக்கெதிரான ஒரு தினத் தொடரிலும் அறிமுகமானார்.

 

பெரிய அணிக்கெதிராக அறிமுகமாகிய இத்தொடரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தனது அபார பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணி இத்தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

 

2004-05 காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக, டெஸ்டில் தனது முதல் அரைசதத்தை நிறைவு செய்தார். 2004 கடைசியில் வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்தது. இந்த அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 11 விக்கெட்டுகளும் , இரண்டாவது டெஸ்டில் 7 விக்கெட்டுகளும் வீழ்த்தி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

ஒருதினப் போட்டிகளைப் பொறுத்தவரை இவரது அதிரடி ஆட்டம் காரணமாக துவக்க வீரராகவும், மூன்றாவது வீரராகவும், நான்காவது வீரராகவும் பேட்டிங்கில் களமிறங்குவார். இதன்படி 2005 அக்டோபரில் இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற ஒருதினப்போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கி 70 பந்துகளில் 4 சிக்ஸர்கள் உள்பட 83 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும் ஒருதின அரங்கில் தனது அதிகபட்ச ரன்னையும் பதிவு செய்தார்.

 

2005-ல் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்தது. இரு அணிகளுக்கும் இடையே செப்டம்பரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடிய இவர், 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி 52 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் வீழ்த்தி, டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார். இரு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது மட்டுமின்றி, இத்தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

 

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு, இதே அணிக்கெதிராக ஹராரேயில் நடைபெற்ற ஒரு தினப்போட் டியில் அபாரமாக பந்துவீசி 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒருதின அரங்கில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். இப்போட்டியின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

 

2006-ம் வருடத்தின் கடைசியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது இவர் டெஸ்டிலும், ஒருதின போட்டியிலும் சிறப்பாக செயல்படாததால் தொடரின் பாதியிலேயே, உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்படி, ஒரு தொடரின் பாதியிலேயே மோசமான பார்ம் காரணமாக தாய்நாட்டிற்கு அனுப்பப்பட்ட முதல் இந்திய வீரர் இவரே.

 

2007- உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தாலும் இவர் ஒரு போட்டியிலும் களமிறங்கவில்லை. ஆனால் 2007, செப்டம்பரில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக பாகிஸ்தானுக்கெதிரான இறுதிப் போட்டியில் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து இந்தியா வெற்றிபெறக் காரணமாக இருந்தார். அப்போட்டியின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

 

19 மாதங்களுக்குப் பிறகு டெஸ்டில் களமிறங்கிய இவர், 2007, டிசம்பரில் பாகிஸ்தானுக்கெதிராக பெங்களூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் அபாரமாக விளையாடி டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

 

2008 துவக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற 3 வது டெஸ்டில் 28 மற்றும் 46 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இவர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

 

இந்த அணிக்காக, மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 131 ரன்கள் குவித்தார். 15 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த அணி அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியது என்பது குறிப்பிடத் தக்கது. இப்போட்டியில் சிறப்பாக ஆடியதால் வங்கதேச முத்தரப்புத் தொடரிலும், பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரிலும் விளையாடினார்.

 

அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து, ஒருதினப்போட்டியில் விளையாடினார். தற்போது இந்திய ஏ அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய ஏ, நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்புத் தொடரில் விளையாடி வருகிறார்.

 

இவர் திறமை வாய்ந்த இளம் வீரர் என்பது மட்டுமல்ல, இந்தியாவின் துடிப்பான ஆல்ரவுண்டர்.

 

கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive